×

வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களின் தற்கொலைக்கு வழிவகுக்கும் ஒன்றிய பாஜ அரசு: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் போர்டர்களுடன் ராகுல் காந்தி உரையாடிய போது, அங்கு பொறியியல் பட்டதாரிகள் உட்பட ஏராளமான படித்த இளைஞர்கள், சரியான வேலை கிடைக்காமல், சுமை தூக்கும் கூலிகள் போன்ற ஆபத்தான முறைசாரா வேலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதிய வேலைவாய்ப்பை வழங்குவதில் தோல்வி அடைந்த ஒன்றிய பாஜ அரசு அதை மூடிமறைக்க, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ரோஸ்கர் மேளாக்களை நடத்தி வழக்கமான அரசுப் பணி நியமனங்களை வழங்கி முற்றிலும் கேலி செய்கிறார்.

பொதுத்துறையில் 10 லட்சம் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 50,000 பேருக்கு நியமன கடிதங்களை கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்குவதாக பாஜ அரசு கூறுகிறது. புதிய நியமனங்களாக அரசு கூறினாலும், அதில் பெரும்பாலானவை வெறும் பதவி உயர்வுகள் என்று தி டெலிகிராப் வெளியிட்ட ஆர்டிஐ பதிவு காட்டுகிறது. மோடி அரசு இளைஞர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நசுக்கியுள்ளது.

இதன் விளைவு, 30 வயதுக்க உட்பட இளைஞர்களின் தற்கொலை விகிதம் 2016 முதல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. 2021ல் ஒரு லட்சம் பேரில் 4.9 பேர் தற்கொலை செய்யும் நிலையை எட்டியுள்ளது. இது 25 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையாகும். ஆனால் இந்த பேரழிவு நிலையை எதிர்கொள்வதற்கு பதிலாக இளைஞர்களிடையே தற்கொலை விகிதத்தை மறைக்க 2022ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை திரிப்பது பாஜ அரசின் அடுத்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

The post வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களின் தற்கொலைக்கு வழிவகுக்கும் ஒன்றிய பாஜ அரசு: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union BJP ,Congress ,New Delhi ,general secretary ,Jairam Ramesh ,Delhi ,Anand Vihar railway station ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...